கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் - 250,000 பேர் வரை இறக்கக்கூடும்: நிபுணர்கள் எச்சரிக்கை

மக்களைப் பாதுகாக்க அதிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக பிரித்தானியாவில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்தால் தற்போது வகுக்கப்பட்டுள்ள சமூக தொலைதூர திட்டங்களையும் மீறி சுகாதார சேவை பாரிய அளவில் பாதிக்கப்படுமென கொரோனா வைரஸ் தொடர்பாக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கிவரும் இம்பீரியல் கல்லூரியின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்த குழுவின் சமீபத்திய அறிக்கையில், ஒரே சாத்தியமான மூலோபாயம் என்பது சீன பாணியிலான அடக்குமுறை கொள்கையாகும், இது முழு மக்களினதும் சமூக தொலைவை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான பயனுள்ள தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் 18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்த் தாக்கத்தைக் கையாள்வதற்காக முன்னெப்போதுமில்லாத வகையில் அமைதிக்கால நடவடிக்கைகளை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இக்குழுவின் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments: