ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்திற்கு பதில் வழங்கவுள்ளார் மஹிந்த

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர அனுப்பிய கடிதம் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் புதன்கிழமை அவரை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்துள்ளது.

"முதலில் கடந்த 20 ஆம் திகதி சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டது, இருப்பினும் கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடன், கடிதத்தில் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பாக விவாதிக்கவும், ஜனாதிபதிக்கு பதில் அனுப்பவும் ஏப்ரல் 15 சந்திக்க திட்டமிட்டுளோம்" என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

"ஒரு சுயாதீன ஆணைக்குழுவாக நாங்கள் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்னால் தற்போது எமக்கு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கருத்தை கூற முடியாது. இந்த விடயத்தை ஆணைக்குழு முழுமையாக விவாதித்த பின்னர் சரியான பதில் அனுப்பப்படும்" என கூறினார்.

கடந்த 6 ஆம் திகதி "நாடாளுமன்றத் தேர்தல் 2020 மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டும் திகதி" என்ற தலைப்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதில் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மே மாத இறுதிக்குள் கூட தேர்தல்களை நடத்துவதற்கு உகந்த சூழல் இருக்கும் என்று எதிர்பார்ப்பது கடினம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.

ஜனாதிபதி மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 25 ஆம் திகதியை தேர்தல் திகதியாக நிர்ணயித்தார், ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்தது.

இருப்பினும் பொதுத் தேர்தலை மே மாதம் 28ம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்த முடியாது என்று இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க முடியாது எனவும் தேர்தல் தினத்தை முடிவு செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என்பதால், அதில் தலையிட ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பொதுத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டும் தினம் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்திற்கும் செல்லும் தேவை ஏற்படாது என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் ஆங்கில ஊடகம் ஒன்று வினவியிருந்தது.

இதற்கு பதிலளித்த அவர், "தேர்தலுக்குத் தயாராவதற்கு தேர்தல்கள் செயலகத்திற்கு குறைந்தது ஐந்து வாரங்கள் தேவைப்படும். ஏனெனில் தற்போது வரை வேட்புமனு தாக்கல் செயற்பாடுகளே நிறைவு பெற்றுள்ளது.

மேலும் தபால் மூலமான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேவையான ஆவணங்களை கூட தேர்தல்கள் செயலகம் பூர்த்தி செய்யவில்லை, மிக முக்கியமாக, அரசியல் கட்சிகள் தங்கள் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நேரம் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

No comments: