யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கான அறிவிப்பு

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு வருவதைத் தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (11) அறிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்து தற்போது தமது சொந்த மாவட்டத்திற்குச் செல்லமுடியாது யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் கிராம சேவையாளர் மற்றும் அந்தப் பிரிவு பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான அனுமதி தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டதன் பின்னரே, இவர்களை அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு ஒவ்வொருநாளும் வெளி மாவட்டத்திற்குச் செல்வதற்கான அனுமதிகோரி பெருமளவில் மக்கள் வருவதை அவதானிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்கும்வரை குறித்த பகுதி கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலகத்தில் பதிவினை மேற்கொண்டு வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

No comments: