இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டது....!

கடந்த ஒரு மாதகாலமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்த ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, இன்று முதல் அன்றாட மக்கள் நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று  அதிகாலை 5.00 மணிக்கு மொனராகலை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை  நுவெரெலியா, மாத்தளை, குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா, காலி, மாத்தறை,மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும்  ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

அத்துடன் அதே  காலப்பகுதியில் கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கும்  ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் அலவத்துகொடை,  வரக்காபொலை, அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மட்டும் ஊரடங்கு நிலைமை மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் புதன்கிழமை 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பில்  11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கு குறித்த திகதியில் தளர்த்தப்படவுள்ளது.

இதனைவிட புத்தளம் மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை  புதன்கிழமை அதிகாலை 5.00 மணி முதல் தளர்த்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 3 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ( தலவத்துகொட, வரக்காபொல, அக்கரைப்பற்று ) 21 மாவட்டங்களிலும், புதன்கிழமை 22 ஆம் திகதி  21 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து 4 மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்) ஊரடங்கு நிலைமை தளர்த்தப்படும்.

எனினும்  நாட்டில் மறு அறிவித்தல் வரை 24 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்  என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அத்துடன்  பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தினந்தோறும் இரவு 8.00 மணி முதல் மறு நாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படும் எனவும்  பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியது.

பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் செலுத்தி மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படும் விதமாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில், அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள்  நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் ஏதேனும் ஒரு பகுதியில் காணப்பட்டால் அந்த பகுதி உடனடியாக ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் , கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாய நிலை ஒன்று ஒரு ஊரில் அல்லது பிரதேசத்தில் ஏற்பட்டால் அந்த பகுதியை மட்டும் முடக்க அல்லது ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியாக இருப்பினும் முடக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமொன்று அங்கு இருக்குமாயின் எக்காரணத்துக்காகவேனும் அந்த பிரதேசத்துக்குள் உள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியளிக்கப்படல் மாட்டது.

ஊரடங்கு தொடர்ந்தும் அமுல் செய்யப்படவுள்ள 24 பொலிஸ் பிரிவுகளிலும், அத்தியாவசிய தேவைகளுக்காக பிரதான வீதிகள் ஊடாக செல்ல அனுமதியளிக்கப்படும். அத்துடன்  ஊரடங்கு நீக்கப்படும் பகுதிகளில் கூட, பிரதான வீதியானது தொழில் நிமித்தம் சென்றுவருவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவே  பயன்படுத்தப்படல் வேண்டும்.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும்  தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சமய விழாக்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

No comments: