நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது இலங்கையில் கோவிட் -19 இல்லை - விமல்

நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எட்டியபோது, கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் இருக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமைச்சர், ஜனாதிபதி சட்ட ஏற்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் ஏற்ப நாடாளுமன்றத்தை கலைத்தார் எனக் குறிப்பிட்டார்.

அதனபடி நாடாளுமன்றத்தினை கலைக்கும் வர்த்தமானியில் வேட்புமனு தாக்கல் தொடர்பான திகதி மற்றும் அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு பின்பற்றிய நடவடிக்கை குறித்து பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் இருப்பினும் பொதுத் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தலை ஒத்திவைக்கும் போது தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர் என்றும் ஆனால் இதுவரை இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பதில் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அவசரகாலச் சட்டம்  நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதியால் காணப்படுகின்றது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments: