மேலும் 03 பேருக்கு கொரோனா - 162 ஆக உயர்வு

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (03) 08 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 11 பேரினதும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 03 பேர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 02 பேர் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர், புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டதோடு, மேலும் ஒருவர் சிலாபம் பிரதேசத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுடன் நெருக்கமாக செயற்பட்ட மேலும் ஒருவர் இதில் அடங்குவதோடு, களுத்துறை பிரதேசத்தில், மூடப்பட்ட பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய இருவர் ஆகிய 11 பேர் நேற்றும் இன்றும் அடையாளம் காணப்பட்ட நபர்கள் என, அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 162 பேரில் தற்போது 132 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 25 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தினம் மரணித்தவருடன் இது வரை 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் குணமடையும் வீதம் 15.7% வீதமாக அமைந்துள்ளதுடன், மரண வீதம் 0.3 வீதமாக அமைந்துள்ளது.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 273 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments