கைது செய்யப்பட்ட ரஞ்சன் இன்று நீதிமன்றுக்கு..!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

ஊரடங்கு உத்தரவின்போது மாதிவெல பகுதியில் அமைந்துள்ள தனது பிசியோதெரபிஸ்ட்டை உள்ளே நுழைய அனுமதிக்காததை அடுத்து வீட்டு வளாகத்தின் நுழைவாயிலில் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குறித்த நபரிடம் ஊரடங்கு அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை என்பதை அங்கு கடமையில் இருந்த அதிகாரி அவதானித்துள்ளார்.

இருப்பினும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரஞ்சன் ராமநாயக்க பொலிஸரை கடுமையாக திட்டியபடி குறித்த நபரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். இதனால் பொலிஸாரின் கடமைக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் மிரிஹான பொலிஸாரால் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனவரி மாதம் இரண்டு முறை கைது செய்யப்பட்ட பின்னர் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

முதலில் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், இரண்டாவதாக நீதிமன்ற விடயங்கள் நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமை தொடர்பான தொலைபேசி ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் அண்மையில் பிணையில் வெளியே வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: