நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவு - சுகாதார அமைச்சரை தாக்கும் ஐ.தே.க.

கொரோனா வைரஸுற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டில், குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரித்துள்ள என்ற சமீபத்திய அறிக்கைகளால் பெரிதும் கவலையடைவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அமுலில் இருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்படலாம் என்றும் கூறியிருந்தார்.

அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்ட 10 நாட்களில், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு படையினர் 180 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு நாட்டை காக்கும் முப்படையினரை பாதுகாப்பதில் ஏற்பட்ட இந்த தோல்வி, சுகாதார அமைச்சர் நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மருத்துவர்கள், தாதியர்கள் முப்படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கான பி.சி.ஆர். சோதனை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றின் தேவையை ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற கட்சித் தலைவரின் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை இந்த கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளினால் தொடர்ந்து விடுக்கப்பட்டுவந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி சுகாதார அமைச்சர் இந்த வேண்டுகோள்களை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும் நாட்டின் தற்போது ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். சோதனைகளை 3,000 ஆக அதிகரிக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் COVID-19 வைரஸ் பரவுவதைக் குறைப்பதில் சமீபத்திய வெற்றி பரிசோதனைகளில் அடங்கியிருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: