அரசாங்கத்தின் தன்னிச்சை நடவடிக்கை, நாடாளுமன்றம் இல்லாத சர்வாதிகாரம் - சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தொடர்ந்தும் முடிவெடுத்தால் இலங்கை சர்வாதிகாரம் கொண்ட நாடாக பார்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு சில விடயங்களை சட்ட பூர்வமாக்கினால் மட்டுமே சர்வதேச சமூகத்தினரிடையே ஒரு சாதகமான பிம்பத்தை உருவாக்க முடியும் என கூறினார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாக நிதியை செலவழிக்கிறது. இத்தகைய நடவடிக்கை நாட்டிற்கு சாதகமற்ற பிம்பத்தை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படலாம், குறிப்பாக அவசரகாலத்தை சட்டம் மூலம் ஊரடங்கு உத்தரவை சட்டப்பூர்வமாக்குவது, தொற்றுநோய்கள் தொடர்பான புதிய சட்டங்களை கொண்டுவருவது மற்றும் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது போன்ற இந்த முயற்சிகளில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

இதனை விடுத்து இன்று அலரிமாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து கலந்துரையாடலில் ஈடுபடுவதனால் எவ்வித நம்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: