கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை உயர்வு..! விபரம் உள்ளே

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 499 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (16) இரவு வரை 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட  நிலையில், இன்று மற்றும் 43 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரை 520 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 177 பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை  இன்று இரவாகும் போது 520 ஆக உயர்ந்துள்ள போதும் மேலும் மேலும் 407 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 337 பேர் கடற்படை வீரர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமாவர். அத்துடன் மேலும் 106 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை கடந்த 12 நாட்களாக இலங்கையில் எந்த ஒரு தொற்றாளரும் சமூகத்திலிருந்து கண்டறியப்படாமை விஷேட அம்சமாகும்.

கொரோனா அபாய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த 12 நாட்களில் சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை.

இந்த 12 நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் கடற்படை, தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து கண்காணிப்பின் கீழ் இருந்தவர்களாவர்.

No comments: