சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்த் தவறியதாக வெளியான படங்கள் போலியானவையாம் - நீதிமன்றில் பொலிஸார்

யாழில் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்த் தவறியதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானது எனவும், அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.  

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் உட்பட 11 பேரை தனிமைப்படுத்த வேண்டும் என கடந்த ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவானிடம் கட்டளை பெற்றனர். 

குறித்த கட்டளையை மீள பெற வேண்டும் என நகர்த்தல் பத்திரம் மன்றில் கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வேளை யாழ்ப்பாண பொலிஸார் சுகாதார விதிமுறைகளை பேணாது செயற்படுவதாக கூறி , ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த புகைப்படங்களை மன்றில் ஒப்படைத்தனர். 

சுகாதார விதிமுறைகளை தாம் கடைப்பிடித்தோம் என கூறிய பொலிஸார், குறித்த படங்கள் போலியானவை எனவும் அவற்றில் உண்மை இல்லை எனவும் மன்றில் தெரிவித்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பல்கலை வாயிலில் , முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றிய வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸாரில் இருவர் முக கவசங்கள் அணியாதும், கைகளுக்கு கையுறை அணியாது பல்கலை மாணவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பிலான புகைப்படங்கள் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்டு,  ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரும் விசனம் தெரிவித்திருந்தனர். 

அந்த புகைப்படங்களே போலியானவை எனவும், அவற்றில் உண்மையில்லை எனவும் அவை வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர். 

No comments: