பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டா தொலைபேசியில் உரையாடல்

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசிமூலம் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து உதவிகளை வழங்கும் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இந்திய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

அத்தோடு இந்த சூழலில், இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

இந்நிலையில் இந்த கலந்துரையாடல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது, அவரின் தலைமைத்துவத்தின் கீழ் அந்நாட்டுமிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது.

இலங்கை தமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்" என பதிவிட்டுள்ளார்.

No comments: