அர்ஜூன மகேந்திரனை இன்டர்போல் கைதுசெய்வதை தடுத்தது யார்? சிறிசேன தகவல்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேகநபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் அவரது  பெயரை மாற்றிக்கொண்டுள்ளதுடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடியில் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்வதற்கு ஏர்நிலை காணப்பட்டபோதும் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து செல்வாக்கு மிக்க சிலர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியிலானவை என்றும் அவரை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தவேண்டிய அவசியமில்லை என்றும் இன்டர்போலிற்கு அறிவித்தனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே இதனை முதல்தடவையாக பகிரங்கப்படுத்துவதாகவும் தனக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் மத்திய வங்கி விவகாரத்தினாலே ஆரம்பமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்கவில்லை என கூறிய மைத்திரிபால சிறிசேன, மோசடியின் ஆழம்வரை சென்று அதனை பகிரங்கப்படுத்த முயலவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் தனக்குமிடையில் பகைமை உருவாகியிருக்காது என்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, சி.ஐ.டி,சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய சட்ட அமுலாக்கல் பிரிவுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கம் அறிக்கையொன்றை உருவாக்கியது. இவை அனைத்தும் வலுவான ஆதாரங்களுமே அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்து நாடு கடத்துவதற்கு போதுமானவை எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments