அருவருக்கத்தக்க நிகழ்வு: வரலட்சுமி சரத்குமார் காட்டம்

அருவருக்கத்தக்க நிகழ்வு என்று கேரளாவில் யானை உயிரிழப்பு சர்ச்சைத் தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. 

அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர். ஆனால் சில விஷமிகள், அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர்.

அதை யானை சாப்பிட்ட போது பட்டாசு வெடித்து சிதறி, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அலறிய யானை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. 

பின்பு 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழில்துறை பிரபலங்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: "நான் சொன்னது போல அரக்கர்கள் மனிதர்கள் தான். பாவப்பட்ட இந்த மிருகங்கள் அல்ல. 

மனித நேயத்துக்கும், பச்சாதாபத்துக்கும், சிறிதேனும் பொது உணர்வு இருப்பதற்கும் படிப்பறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது. அருவருக்கத்தக்க நிகழ்வு. இந்த அரக்கர்களுக்கு கரோனா வந்து அவர்கள் இறப்பார்கள் என்று நம்புகிறேன்"

No comments: