பொதுப் போக்குவரத்து தொடர்பான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோல முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இன்று (02) காலை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அவ்வமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுளளது.

எதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் நடத்தைக் கோலம் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் நிலை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைகளை வழமைப்போல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்களும், 23,000 தனியார் பேருந்துகளும் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அவை பயணிகளின் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லை. அதனால், ஆசனங்கள் இல்லாது பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசன எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாத்திரமே பஸ்களில் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால்  வழமைபோல போக்குவரத்தில் ஈடுபடும்போது பல சிக்கல்கள் எழுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தக் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன், பாடசாலை சேவை பேருந்து, பிரத்தியேகமாக சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் பதிவு செய்வதற்கான ஆவணங்களை கொண்டுள்ள அனைத்து பேருந்துகளையும் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்காக தற்காலிகமாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தேசிய போக்குவரத்து சபையில் அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறே ரயில்களின் ஊடாக நாளொன்றில் சுமார் 1 இலட்சத்து 47 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்ற நிலையில் ரயிலினுள் 25 ஆயிரம் ஆசனங்களே உள்ளன. 

ரயிலில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்வதால்  முடிந்தவரை முக்கியமான தேவைகளுக்காக மாத்திரம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

No comments: