அனைத்து சாதகமான முன்னேற்றங்களையும் புறக்கணித்து பச்லெட் அறிக்கை வெளியிட்டுள்ளார்- சப்ரி காட்டம்


இலங்கையில் நடைபெற்று வரும் அனைத்து சாதகமான முன்னேற்றங்களையும் முற்றிலுமாக புறக்கணித்து, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிட்டிருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியிட்டுள்ள மிச்செல் பச்லெட்டின் ஒருதலைப்பட்ச அறிக்கையை அரசாங்கம் முற்றிலுமாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்கொலை குண்டுத் தாக்குதலை அறிமுகப்படுத்திய உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே தாங்கள் போராடியதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் ஏராளமான முன்னேற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இறுதிக்கட்டதில் சரணடைந்த சுமார் 12,784 விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை விடுதலை புலிகளுக்கு எதிரான இடம்பெற்ற யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யு.என்.எச்.ஆர்.சியின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானிய தலைமையிலான உறுப்பு நாடுகள் முன்வந்துள்ள நிலையில் அவர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அதைப் பற்றி பகுத்தறிவுடன் சிந்திப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

No comments: