கலப்பு தேர்தல் முறை ஈ.பி.டி.பி. உள்ளிட்ட கட்சிகள் பரிந்துரை!!


தொகுதிவாரி  மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என மகஜன எக்ஸத் பெரமுன தெரிவித்துள்ளது.


தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த கட்சி இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.


சபையில் உறுப்பினர்கள் 225 பேரில் 140 பேர் தொகுதிவாரி முறை மூலமும் 70 பேர் மாவட்ட வாரியாக விகிதாசார முறையின் மூலமும் அதே நேரத்தில் தேசிய பட்டியலுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் அமைப்பின் புதிய சீர்திருத்தங்கள் தொகுதிகளின் தெளிவான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என மகஜன எக்ஸத் பெரமுனவின் பிரதி செயலாளர் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி கூறினார்.


இதேவேளை, புதிய தேர்தல் முறையில் அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.


65 சதவிகித உறுப்பினர்கள் தொகுதிவாரி முறையிலிருந்தும், மீதமுள்ள 35 சதவிகிதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மும்மொழிந்துள்ளனர்.


சபைத் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் தேச விமுக்தி ஜனதா கட்சியும் தங்களது முன்மொழிவுகளை இதன்போது சமர்பித்திருந்தனர்.

No comments: