தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய இராஜாங்க அமைச்சர் - கஜேந்திரகுமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


அனுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக   மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவதாக மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார்.


தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கைதிகளின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பார்வை இலங்கை மீது இருக்கும்போதே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இதனை அவசரமாக எடுத்துச் செல்லாவிட்டால், தமிழர்களின் நிலை இன்னும் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: