மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது என்றும் அவ்வாறான நோக்கம் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் வரவுசெலவு  திட்டத்தை இந்த அரசாங்கம் சமர்பித்திருக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

2015 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தவுடன் அதே ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத பட்சத்திலும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கத்தின் பலவீனமான நிதி முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் 500 பில்லியனுக்கும் அதிகமான தேசிய வருமானம் இழக்கப்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம்  மக்களுக்கு குறிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு கடந்த அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச ஆனால் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 100  நாட்களுக்கு அதிகமான நாட்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித அபிவிருத்திகளையும், மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

Post a Comment

0 Comments