கொரோனா தொற்று இல்லை...! 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் சிறிதரன்...!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மார்ச் 2 ஆம் திகதி ஜெனிவாவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று காலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் வைத்தியசாலைக்கு வரும்போது அவருக்கு காய்ச்சலும், இருமலும், தொண்டை வலியும் இருந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகம் எழுந்தமையினால், சுவாச ​நோய் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் மற்றும் வெளி நோயாளர் பிரிவு வைத்தியரின் ஆலோசனையின்படி அவரை யாழ். வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் கலைநாதன் இராகுலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வினவிய போது, சி.சிறிதரன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவருக்கு கொரோனா இல்லை என தீர்மானித்தமையினால் வீடு திரும்பியதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் வெளிநாடு சென்று நாடு திரும்பி 14 நாட்களை கடந்துள்ளமையினால், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லையென வைத்திய நிபுணர்கள் தீர்மானித்ததாக அவர் கூறினார்.

எனினும், அவரை வீட்டில் ஐந்து நாட்களுக்கு தனியாக இருக்குமாறு அறிவித்ததாகவும் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

No comments: