பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை ஆகும்.

இதேவேளை ஏற்கனவே பிரித்தானிய இளவரசர் சார்ள்சுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொரிஸ் ஜோன்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விற்றியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. எனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்வேன். நாம் இந்த வைரஸுக்கு எதிராகப் போராட, காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரச நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இளவரசர் சார்ள்சும் கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்தபடியே தமது அலுவல் பணியை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments