அரச துறையினருக்கு மாத்திரம் விடுமுறை அளித்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது - சஜித்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்றும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாமல் அரசாங்கம் தற்காலிகமாகவேனும் தேர்தலை பிற்போடவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பல நாடுகளில் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் எமது நாட்டில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

மாறாக பொதுத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் முயற்சியே தற்போது அரசாங்கத்திடம் இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டுக்குள் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது என சுட்டிக்காட்டிய அவர், எனவே தான் அரசியல் பேதமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தலை பிற்படுத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச துறையினருக்கு மாத்திரம் விடுமுறை அளித்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச முழு நாட்டையும் முடக்கி வைரஸ் தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆனால் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் திருப்தியடைய முடியாமல் இருக்கின்றது என்றும் கவலை வெளியிட்டார்.

No comments: