அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் - பிரித்தானியர்களுக்கு அறிவுரை

(CBC TAMIL - UK NEWS) கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக 30 நாட்களுக்கு அனைத்து அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களையும் பிரித்தானியர்கள் தவிர்க்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வேகமாக மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு அமைய உத்தியோகபூர்வ பயண ஆலோசனையில் மாற்றங்கள் தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள பிரித்தானிய பயணிகள் இப்போது பல்வேறு நாடுகளில் பரவலான சர்வதேச எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் பூட்டுதல்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்த அவர் வெளியுறவுத்துறை அமைச்சு எப்போதும் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே செயற்படுகிறது என கூறினார்.

எனவே உடனடியாக ஆரம்பகட்டமாக 30 நாட்களுக்கு உலகளவில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் நிச்சயமாக இந்த முடிவு தொடர்ந்தும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தேவைப்பட்டால் இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானியர்கள் அவ்வாறு செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் டொமினிக் ராப், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்ப முடியாது என்ற அபாயமும் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.

No comments: