இலங்கையில் இரண்டாவது நபருக்கும் கொரோனா வைரஸ் - சுகாதார அமைச்சு

(CBC TAMIL - COLOMBO) - இலங்கை இரண்டாவது நபருக்கும் (44 வயது) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியை சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரும், சோமாவதிக்கு யாத்திரை சென்ற நபர் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சோமாவதிக்கு யாத்திரை சென்ற நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் நாட்டின் சில பகுதிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த நபர்கள் இருவரும் அங்கொட ஆதார வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த நபர்கள் தமது வீட்டிலேயே தங்கி தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: