கொரோனா வைரஸ் - அரசாங்கத்தை எச்சரித்து 13 யோசனைகளை முன்வைத்தார் ரணில்

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித நிபந்தனையின்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்திடம் 13 யோசனைகளையும் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், "கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. வைரஸ் பரவியுள்ள நாடுகள் அனைத்திலும் ஒட்டுமொத்தமாக சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு ஐரோப்பில் மையம் கொண்டிருந்த வைரஸ் பரவல் தற்போது அமெரிக்காவையும் பாரியளவில் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மரணங்கள் 8 ஆயிரத்தை அண்மித்துள்ளன.

எனினும் ஜேர்மன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜேர்மனில் பாதிக்கப்பட்ட சுமார் 43 ஆயிரம் பேரில் 267 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன. 

வியாழக்கிழமைபிரித்தானியாவில் ஒவ்வொரு 13 நிமிடத்துக்கும் ஒரு மரணம் பதிவாகியது. இந்தியாவில் பாதிக்கப்பட்ட 700 பேரில் 20 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் நிலைவரம் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியா இலங்கைக்கு அயல் நாடு என்பதால் இவ்விரு நாடுகளுக்கிடையிலான அந்நியோன்யம் பாதிக்கப்படலாம்.

இதை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். அரச மருத்துவ அதிகாரிகள் சங்ககத்தின் கணிப்பின் படி இலங்கையில் சுமார் 500 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சமூகத்தில் 19,000 பேருடன் தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறானவர்கனை உடனடியாக இனங்கண்டு ஏனையோரைப் போன்று உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அத்தியாவசியமாகும்.

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில்  அனைவரும் இணக்கம் தெரிவித்தமைக்கமைய சமூக இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவம் இதுவேயாகும். சுகாதார அமைச்சினால் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இந்த வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாமனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இதன் காரணமாக என்னால் முன்வைக்கப்படும் கீழ்வரும் யோசனைகள் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகின்றேன்.

  • ஊடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகளை ஒன்றிணைத்து செயற்படும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதன் மூலம் கூடியளவு சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
  • தனியார் வைத்தியசாலைகளில் இலவசமாக பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு அதற்கான கட்டணத்தை அரசாங்கத்தின் மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • இது தொடர்பில் பொதுவானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக உடனடியாக உரிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும்.
  • மருத்துவ பரிசோதனைகளுக்காக உகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • முகக்கவசம் மற்றும் வென்டிலேட்டர்ஸ் என்பவற்றை கொள்வனவு செய்தல் மற்றும் இலங்கையில் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • வைத்தியசாலைகளில் கட்டடில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
  • ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதால் அதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை ஜப்பானில் உள்ளன. அவற்றில் குறிப்பிட்டளவை இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும். நான் இது தொடர்பில் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவரிடம் கலந்தாலோசித்திருக்கிறேன்.
  • இந்திய மற்றும் இலங்கை பிரஜைகள் கடற்பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கைளில் ஈடுபடும் போது நெருங்கிச் செயற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட வேண்டும்.
  • சிங்களம் - தமிழ் புத்தாண்டு, உயிர்த்த ஞாயிறு மற்றும் ரமழான் பண்டிகை தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்கூட்டியே பொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பவையே  என்னால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் யோசனையாகும்.

Post a Comment

0 Comments