யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு - ஊரடங்கு வேளையில் அதிரடியாக கைது

யாழ். மாவட்டத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பலில் ஒன்றான ஆவா குழுவினர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

மல்லாகம் சேர்ச் லேனில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் ஆவா என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது நண்பர்களால் இணைந்து இன்று நடத்தப்பட்டது.

அதுதொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். அதன்போதே 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆவா குழு முக்கியஸ்தர் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments