2 வாரங்களில் கொரோனா வைரஸில் இருந்து மீளமுடியும் - சுகாதார அமைச்சர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் இருந்தால் அவர்களை இரு வாரங்களுக்குள் அடையாளம் காணமுடியும் என்றும் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தால் 2 வாரங்களில் கொரோனா வைரஸில் இருந்து மீளமுடியும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறானதொரு நோய்த்தொற்று என்பது இலங்கைக்கு புதிதான ஒரு விடயம் என்றும் இருப்பினும் எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி எம்மால் இவ்வளவு தூரம் விரைவாக செயற்பட முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வைத்திய அதிகாரிகள் மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்கான சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் என கூறிய அவர், இதுவரை 180 பேர் கண்டறியப்பட்டால் நாட்டில் மேலும் நோயாளிகள் இருந்தால் அவர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

மேலும் இந்த தொற்று இருப்பவர்களுக்கு 14 நாட்களில் வைரஸ் உறுதியாகிவிடும் என கூறிய அவர் ஒருவேளை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் தத்தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கேட்டுக்கொண்டார்.

No comments: