சிகிச்சைகளில் தளர்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் - அனில் ஜாசிங்க எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளை இனம்காணுதல் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் தளர்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக நேற்று (08) கருத்து தெரிவித்த அவர், இருப்பினும் இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இன்னும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இத்தாலில் இருந்து வந்தவர்களினால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என்றும் இந்தோனேஷியா, இந்தியா, டுபாய் போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களுடன் பழகியவர்களே தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நாட்டில் தற்போது நிலைமைகள் மோசமடையவில்லை என்றாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தளர்வடைந்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எனவேதான் சுகாதார அமைச்சு அறிவித்ததன் படி சமூக இடைவெளி அத்தியாவசியம் என்றும் அதனை புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டார்.

No comments: