ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...!

கொரோனா வைரஸ் நோயாளிகள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதிலும், எதிர்வரும் புதன்கிழமை (22) முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் தளர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாத காலமாக வணிக செயற்பாடுகள் தடைபட்டுள்ள நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஊரடங்கு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.

அத்தோடு கொழும்பு மாவட்டம், கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஏப்ரல் 22 முதல் காலை 5 மணி முதல் 8 வரை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என நேற்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

இருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்காக ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் காலை 10 மணிக்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் அரசாங்க சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க

No comments: