வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை - போதனா பணிப்பாளர்

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லையெனவும் ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்பதுடன் விழிப்புடன் இருப்பதும் அவசியம் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று (14) யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், மற்றவர்களுக்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதி செயலணி முடிவுகளை எடுக்கிறது. எமது கருத்துக்களைக் கேட்கும்போது, நிலைவரங்களைத் தெரிவிக்கிறோம். ஊரடங்கு பற்றி, நோயின் எதிர்காலம் பற்றி உடனடியாகக் கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இது உலகளாவிய தொற்றாகும்.

நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்று வடக்கில் எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது. என்றாலும், நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனைகள் செய்யலாம். விரைவில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளொம். அங்கும் நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மையத்தில் தொற்று ஏற்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியனர். இதன்போது தெரிவித்த அவர்,

“தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள். இதுபற்றி என்னால் தெளிவாகக் கூற முடியாவிட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே, வளியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாகக் கூறமுடியாது. ஆனால், அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது” என்றார்.

No comments: