யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதித்த 8 பேரின் மாதிரிகள் அநுராதபுரத்துக்கு....!

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகள் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அவர்களை கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பத்து பத்து பேராக பரிசோதனைக்கு உட்படுத்திய போது , முதல் நாள் 3 பேர்,  மறுநாள் 3 பேர் என 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

அன்றைய தினம் அடையாளம் காணப்படாத 14 பேரையும் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் பரிசோதித்த போது , அவர்களில் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மேலதிக பரிசோதனைக்காக குறித்த 8 பேரினுடைய மருத்துவ மாதிரிகள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றை யாழ்.போதனா வைத்திய சாலை ஊடாக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments