கொரோனாவை எதிர்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்தது ஐக்கிய தேசியக் கட்சி

கோவிட் -19 நெருக்கடியை ஒரு தேசிய பேரிடர் என்று கருதி, அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து செயற்படம் என்ற முடிவை எட்டியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று (01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஆறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், "இரு தரப்பினரும் இதை ஒரு தேசிய பேரிடராகவே பார்க்கிறார்கள். அதனை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம், கட்சி நலன்களுக்கு மேலாக மக்களின் நலன்களே எமக்கு முக்கியம்" என கூறினார்.

இதேவேளை சில சந்தர்ப்பங்களில் உணவு விநியோகத்தை அரசியல்மயமாக்குவது குறித்தும், ஊரடங்கு உத்தரவின் போது நாளாந்தம் ஊதியம் பெறுபவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தது என்றார்.

"பேரழிவு நேரத்தில் இந்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கு இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

No comments: