மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்...!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இன்று (16) முற்பகல் 11.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக காணப்படுகின்றது.

நேற்றையதினம் (15) 05 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்களில் 04 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டதாகவும், இவர்களில் 02 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்றைய நபர் வீட்டிலிருந்து அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார். குறித்த நபர் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தம்பதிவ யாத்திரைக்குச் சென்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 59 வயதான பெண் என அவர தெரிவித்தார். 

இப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகவீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 238 பேரில் தற்போது 166 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 144 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: