இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

கொரோனாவின்  தாக்கம் உலக நாடுகளிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்குகளை அமுல் படுத்தி தமது நாட்டை முடக்கிவைத்து கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா தமது நாட்டை 21 நாட்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்சூழலில், இந்தியாவின் உத்தரபிரதேசம், மாநில தலைநகரின் புராணி பஸ்தி பகுதியை சேர்ந்த பெற்றோர் தமக்கு  புதிதாகப் பிறந்த இரட்டையர்களுக்கு  'கொரோனா மற்றும் கொவிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராய்ப்பூரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி சிசேரியன் மூலம் பிறந்த ஆண் (கொவிட்) மற்றும் பெண் (கொரோனா) குழந்தைகளுக்கே அவர்களது பெற்றோர் இப் பெயர்களை சூட்டியுள்ளனர்.

குழந்தைகளுக்கு பொதுவாக நாம் ஆசையாக விரும்பும் பெயர்களைதான் தேர்ந்தெடுப்போம் எனினும் இப் பெற்றோர் உலகமே வெறுக்கும் இவ் வைரஸின் பெயரைச் சூட்டியமைக்கு அவர்களின் 27 வயதான தாய்  ப்ரீத்தி வர்மா இவ்வாறு காரணம் தெரிவித்துள்ளனர்.

"பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு பிரசவம் இடம்பெற்றது, எனவே, நானும் என் கணவரும் அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினோம். உண்மையில் வைரஸ் ஆபத்தானது மற்றும் உயிரைக்கொல்கின்றது, ஆனால் அத் தொற்று மக்களை சுகாதாரம் மற்றும் பிற நல்ல பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தச் செய்தது. எனவே, நாங்கள் இந்த பெயர்களைப் பற்றி யோசித்தோம். ஒருவேளை, எதிர்காலத்தில் மனமாற்றம் ஏற்பட்டால் தமது இரட்டைக் குழந்தைகளின் பெயர் மாற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக" அவர்கள் கூறினர்.

இதேவேளை, வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் குறித்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தையொன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: