இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயன்முறையை பின்பற்றவேண்டும் - கனேடிய பிரதமர் வலியுறுத்து

எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது முக்கியமானது என தெரிவித்துள்ள கனடா பிரதர் ஜஸ்ரின் ரூடோ அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை தொடர வேண்டும் என்று இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிப் போரின் 11ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் பதினோராவது ஆண்டு நினைவின்போது, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், அன்புக்குரியவர்களையும் நான் மனதில் கொண்டுள்ளேன்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டம் உட்பட 26 வருட கால போர் குறித்தும், இழக்கப்பட்ட உயிர்கள், காயமடைந்த, காணாமல் ஆக்கப்பட்ட, அல்லது வீடுகளில் இருந்தும் சமூகங்களில் இருந்தும் இடம்பெயர்க்கப்பட்டோர் குறித்தும் மீள நினைத்துப் பார்ப்பதற்கான நேரமாக இது அமைகிறது.

இந்தப் போரினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பல கனேடியர்களைக் கடந்த பதினொரு வருடங்களில் நான் சந்தித்துள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெருந் துன்பம், தொடர்ந்து மீண்டெழுதல் என்பன குறித்து அவர்கள் கூறியவை, நீடித்திருக்கும் அமைதி, மீளிணக்கம் என்பவற்றுக்காகத் தொடர்ந்து பணியாற்றவேண்டியதை நினைவுபடுத்துகின்றன.

கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது எதிர்காலத்துக்கு இன்றியமையாதது. இலங்கை அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடைமுறையைப் பின்பற்றவேண்டுமென்ற கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நாட்டில் நீண்டகால அடிப்படையில் அமைதியையும் செல்வச்செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு உறுதுணையான நீதி, மீளிணக்கம், அனைவரையும் உள்வாங்குதல் போன்றவற்றுக்காகப் பணியாற்றும் இலங்கை அரசு உட்பட்ட அனைவருக்கும் கனடா அதன் தொடர்ச்சியான ஆதரவை வழங்குகிறது.”

கனடா மேலும் பலமடைவதற்கு அதன் பன்முகத்தன்மையும், இந்த நாட்டைத் தமது நாடாக ஏற்றுக் கொண்ட பல்வேறு பண்பாடுகள், பாரம்பரியங்கள் என்பனவும் காரணமாக அமைகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

No comments: