தமிழர்களுக்கு எதிராக நாம் போரிடவில்லை - பிரதமர் மஹிந்த

2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த உள்நாட்டுப்போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ஆனால் உலகின் மிக பயங்கர பயங்கரவாதிகள் என எப்.பி.ஐ. அறிவித்த ஒரு அமைப்புக்கு எதிரானது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளை மௌனிக்க செய்து 11 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கடந்த அரசாங்கம் இராணுவத்தை சர்வதேச அளவில் காட்டிக் கொடுத்தது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவமானத்தையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், விடுதலைப் புலிகள் இல்லாததால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அந்த மாகாணங்களின் மக்களின் இறையாண்மை மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வெல்லமுடியாத யுத்தமாக பரவலாகக் கருதப்பட்டதை வென்றதன் மூலம் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்திய முப்படையினர் மற்றும் பொலிஸார், இப்போது மீண்டும் கொரோனா வைரஸினை எதிர்த்து சுகாதாரத் துறையுடன் இணைந்து செயற்ப்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஓய்வுபெற்ற இராணுவத்தினர் அரசாங்கத்தில் ஏதேனும் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டால், அது எதிர்க்கட்சிகளால் ‘இராணுவமயமாக்கல்’ என்று சித்தரிக்கப்படுகிறது. இதனைத் தான் வன்மையாக கண்டிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments: