யாழில் தாக்குதல் நடத்தச் சென்ற 7 இளைஞர்கள் அதிரடியாக கைது

நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக அவரது வீடு தேடி இளைஞர்கள் 7 பேர் கொண்ட குழு, மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது.

இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், அந்த இளைஞர்கள் குழுவை விரட்டிச் சென்ற போது, குழுவில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது இரண்டு பேர் சிக்கினர்.

குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தப்பி ஓடிய மேலும் 5 பேர் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நல்லூர், அரியாலை மற்றும் ஓட்டுமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 7 பேரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் முன் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: