பயங்கரவாத தாக்குதல் குறித்து பாக்கிஸ்தான் முன்கூட்டியே எச்சரித்திருந்ததா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாக்கிஸ்தான் முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்திருந்தது குறித்து நான் எதனையும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானிலிருந்து எச்சரிக்கை வெளியானது குறித்து நான் எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவிடமிருந்து மாத்திரம் எங்களிற்கு எச்சரிக்கைகள் கிடைத்தன என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர்  ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர், இந்தியாவிடமிருந்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததாக புலனாய்வு அமைப்பினர் எனக்கு தெரிவித்தனர் ஆனால் பாக்கிஸ்தான் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து பாக்கிஸ்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருந்தது என இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் .போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளை அவதானித்த பின்னர் இலங்கை அதிகாரிகளிற்கு அது குறித்து உரிய நேரத்தில் தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த தகவலையும் பயனற்றது என கருதமுடியாது என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் அவ்வாறான தகவல்களை அலட்சியம் செய்வதால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் போன்றவை இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments