ஜனாதிபதி செயலணிகள் குறித்து கேள்வி எழுப்பும் அமெரிக்கா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் கரிசனை வெளியிட்டுள்ளார்.

செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட ஆணை மற்றும் அதன் கட்டமைப்பு குறித்து உள்நாட்டில் வெளியிடப்படும் கரிசனைகளை நான் பகிர்ந்துகொள்கின்றேன் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் என்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒழுக்கமுள்ள சமூகத்திற்கான செயலணிக்கான ஆணை குறித்தும் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் இலங்கை நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை தனது ஜனநாயக கட்டமைப்பினை பலப்படுத்துவது மற்றும் ஆழமாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த ஸ்தாபனங்களிற்குள் எதனை உள்வாங்கவேண்டும் என தெரிவிப்பது அமெரிக்காவின் பணி என நான் கருதவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் தேர்தலிற்கு பின்னர் அரசமைப்பிற்கான பத்தொன்பதாவது திருத்தம் செயல் இழக்கச்செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் 19 வது திருத்தத்தின் தகுதிகளை பரிசீலிக்கவேண்டும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களான மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம்,போன்றவை குறித்தும் சிந்திக்கவேண்டும், ஜனநாயகத்திற்கு எவை பங்களிப்பு செய்கின்றன என்பது குறித்தும் இலங்கைமக்கள் சிந்திக்கவேண்டும் என அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார்.

மில்லேனியம் சவால் உடன்படிக்கை குறித்து தீர்மானம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: