மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகின்றார் - ஹரின் குற்றச்சாட்டு

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

மெதிரிகிரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்று ரீதியில் கத்தோலிக்கர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களித்தபோதும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அந்த நிலைமை மாறியது என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்வைப்பதற்கு பயன்படுத்தினார்கள் என்றும் குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களிற்குள் தனியார் தொலைக்காட்சியொன்று அதற்கான பிரசாரத்தை ஆரம்பித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டார் அது தேர்தலில் மக்களின் ஆதரவு ராஜபக்ஷ தரப்பினருக்கு சார்பாக திரும்புவதற்கு காரணமாக அமைந்தது எனவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நான் அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஏமாற்றதை தெரிவித்ததாகவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த புலனாய்வு அறிக்கைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க உண்மையாகவே எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments: