பிரேமதாசாவின் தந்தையே விடுதலைப்புலிகளை பலப்படுத்தினார் - கருணா கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடியுள்ள விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி விடுதலைப்புலிகளை பலப்படுத்தியதன் மூலமும் ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒழிக்கும் நடவடிக்கை மூலமும் நாட்டிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருணா இதனை தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது படையினர் கொல்லப்பட்டமை குறித்த தனது கருத்து நான் தெரிவித்த சூழமைவிலிருந்து பிரித்து பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது இராணுவமும் விடுதலைப்புலிகளும் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தனர்,எனினும் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைதி நிலைநாட்ட்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் நான் இழக்கப்பட்ட உயிர்கள் குறித்தே கருத்து தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனமாக காணப்பட்ட தருணத்தில் தனது தந்தை விடுதலைப்புலிகளிற்கு 5000துப்பாக்கிகளை வழங்கினார் என்பது சஜித்திற்கு தெரிந்திருக்கும் என கருணா தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியினர் ஆயுதங்களை மாத்திரம் விநியோகம் செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அனுரகுமார திசநாயக்கவிற்கு எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான உரிமையில்லை அவர்கள் 80,000 பேரை கொலை செய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச எனக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்தார் எனினும் நான் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றம் செல்ல விரும்புவதால் அதனை நிராகரித்துவிட்டேன் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

நான் அம்பாறையில் போட்டியிட விரும்புகின்றேன் அங்கிருந்து என்னால் வெற்றிபெற முடியும் என நான் மகிந்தவிற்கு தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறைமாவட்டத்தில் அபிவிருத்திதிட்டத்தில் அபிவிருத்திதிட்டங்கள் எதுவும் இல்லாததால் போதியளவு வேலைவாய்ப்பு இல்லாததால் நான் அந்த பகுதியை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றேன் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் அங்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஒடுக்கியுள்ளனர் அதனை நான் மாற்றி இரு சமூகத்தையும் கவனத்தில் எடுக்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: