இனிமேல் வாட்ஸ் அப் உரையாடல்களை டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம்


வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகளை டெலிகிராம் செயலியிலும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பு குறித்து பல பயனர்களிடையே கேள்வியெழுந்தது.

இதனால் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக இருக்கும் மற்ற உரையாடல் செயலிகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். இதில் டெலிகிராமும் ஒன்று என்பதுடன் கிட்டத்தட்ட 52.5 கோடி பேர் தற்போது பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ் அப்பில் உரையாடிவிட்டு, புதிதாக டெலிகிராமில் உரையாட ஆரம்பிக்கும்போது பழைய உரையாடல்கள், பகிர்வுகள் அனைத்தும் வாட்ஸ் அப்பில்தான் இருக்கும். 

ஆனால், அப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலிகளில் இப்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப்பில் இருக்கும் பயனரது உரையாடல்களை அப்படியே டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம். 

அப்படிச் செய்யும்போது, விட்ட இடத்திலிருந்தே உரையாடலைத் தொடங்கும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கும். தனி நபர் உரையாடல், குழு உரையாடல் என இரண்டையுமே இப்படி அங்கிருந்து இங்கு மாற்றிக் கொள்ளலாம்.

No comments: