தடைகள் அனைத்தையும் தண்டி மட்டக்களப்பை வந்தடைந்தது போராட்டம்


பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.

வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அத்தோடு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டபோது அத்தனையும் மீறி போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை, பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சனை, ஜனாஸா தகனம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியும் அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்த குறித்த போராட்டத்திற்கு அட்டாளைச் சேனையில் முஸ்லிம்களும் இணைந்து வலுச்சேர்ந்தனர்.

No comments: