மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிட்டுள்ள ஒன்றியம் மீண்டும், காணாமற்போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை பாதுகாப்பது, அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கு போதுமான வசதிகளை வழங்குவது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு மனித உரிமை மீறல்கள் மற்றும் பிறவிடயங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கவலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றமை மற்றும் அச்சுறுத்தப்படுகின்றமை குறித்தும் கவலையடைவதாககுறிப்பிட்டுள்ளது.

அத்தோடு கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், சித்திரவதை போன்றவை குறித்தும் கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக மனித உரிமை பேரவை, பொறுப்புக் கூறலின் அவசியத்தை வலியுறுத்தினாலும், உள்நாட்டு பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவே பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனை குறித்த ஆணையாளரின் அறிக்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.

அந்தவகையில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியுடன் இருக்கும் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

No comments: