விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசாரணை பிரிவில் சச்சித்ர சேனாநாயக்க முன்னிலை


ஆட்டநிர்ணய முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரரான சசித்ர சேனாநாயக்க இன்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக, இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்த சேனாநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக விளையாட்டு முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவில் அவர் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, சசித்ர சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை கோரிய மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா முன்னிலையில் குறித்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்த சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை கோரிய மனுவில் குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டி, மனுவை நிராகரிப்பதாக, நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த முன்பிணை மனுவை உரிய முறையில் பூர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

No comments: