ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் 13 வது இட ஒதுக்கீடு: எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கூடுகின்றது சபை!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் 13 வது இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த அரசியல் தலைவர் என்பதனால் சபையின் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசையில் அவருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகும்போது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையை அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் அதனை ஆதரிக்கும் கட்சிகளிடையேயும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் பின்னரியில் கடந்த 7 ஆம் திகதி அறிக்கை ஒன்றினை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி, கட்சியின் எதிர்கால வெற்றிக்கு சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கை தெரிவிக்கப்பட வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவுகளை தொடர்ந்தும் இந்த அறிக்கை வெளியாகியது.

இருப்பினும் இத்தகைய ஊடக பிரச்சாரங்களை கடுமையாக கண்டித்த அதேவேளை மக்களால் படிப்படியாக நிராகரிக்கப்படும் அரசாங்கமும், அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் ஒப்பந்த அரசியலும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளதாக சாடியிருந்தது.

No comments: