முகக்கவசம் அணியாதவர்கள் - பொலிஸார் முன்னெடுக்கும் விசேட கண்காணிப்பு


முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொழும்பு மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் பொலிஸார் விசேட கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.


தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 52,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 46,000 இற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,000 பேருக்கு எதிராக எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.


இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 4,120 வாகனங்களில் பயணித்த 7,644 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


இதன்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 99 வாகனங்களில் பயணித்த 150 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments: