மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார்


பசில் ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்குவதற்கான திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் நிதி அமைச்சின் கீழ் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சு பொறுப்பு பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் உயர் மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி நிதி அமைச்சின் கீழ் உள்ள பெரும்பாலான பொறுப்புகள், புதிய அமைச்சிற்கு மாற்றப்பட உள்ளன.


1997 முதல் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ, 2007 முதல் 2015 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த ஆலோசகராகவும், 2010 முதல் 2015 வரை பொருளாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் சட்டங்கள் 2020 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் மூலம் இரத்து செய்யப்பட்டன.


இதேவேளை நாடாளுமன்றத்திற்குள் வருமாறு ஆளும்கட்சியின் உறுப்பினர்களின் அழைப்பினை பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.


தமது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நுழைவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு பசில் ராஜபக்ஷ அரசாங்கத்தை பலப்படுத்துவார் என நம்புவதாகவும் கூறினார்.

No comments: