நாட்டை முழுமையாக முடக்க இயலாது, கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுல் - ஜனாதிபதி


நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், கடந்த திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


அத்துடன் அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக பிறப்பிப்பது தொடர்பாக  கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு பணித்துள்ளார் என அரசமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தனது தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போதே, நாட்டை முழுமையாக மூடமாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


நாட்டை முழுமையாக மூடினால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்படும். அன்றாடம் வாழ்க்கை நடத்தும் ஒரு பிரிவினர் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தப்பூசி ஏற்றலை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

No comments: