செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை,


ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுவது என்பது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


மேலும் மாணவர்களுக்கும் அவர்களின் கற்றல் செயன்முறைக்கும் உதவுவது ஆசிரியர்களின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை  மீண்டும் திறக்கும் திட்டம் இருந்தபோதும் தற்போதைய நிலைமை காரணமாக செப்டம்பர் மாதத்திற்குள் திறக்க முடியாமல் போகும் என குறிப்பிட்டார்.


எனவே அவர்கள் பாடத்திட்டத்தை உள்ளடக்க ஒன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கூறினார்.


இருப்பினும், தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மாணவர்களுக்கான ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

No comments: